Friday, December 2, 2011

SurutaPalli - சுருட்டபள்ளி


'சுருட்டபள்ளி' திரு கோயில் ஆந்திரா பார்டரில் உள்ளது. அங்கே பிரதோஷ காலம் ரொம்பவும் விசேஷம். 'பள்ளிகொண்டேஸ்வரர்' என்பது அங்கே சிவனின் நாமம். ஸ்ரீரங்கம் பெருமாள் மாதிரிப் படுத்த கோலத்தில் சிவன் அங்கே ஆச்சரியமான விஷயம். அதுவும் பெரிய சிலை வடிவில் அசல் பெருமாள் மாதிரி, ஆனால் பார்வதி மடியில், ஆனந்த புன்னகையுடன் படுத்திருக்கிறார். கர்ப்பக்கிரகத்தைச் சுற்றிலும் சுவற்றில் தேவர்கள், ரிஷிகள்.
சின்ன, கிராமத்துக் கோவில் தான் என்றாலும் நன்றாகப் பராமரித்து வருகிறார்கள். சிவனுக்கு எதிரில் இருக்கும் சின்ன நந்திக்குத்தான் பிரதோஷ காலத்தில் எல்லா மரியாதைகளும், பூஜைகளும்.


கபாலிஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தின் போது சிவனைப் பல்லக்கில் தூக்கி வருவதையும், பக்தர்கள் ருத்ரம், சமகம் சொல்லியபடி பிரதட்சிணமாக சிவனின் பின்னேயும் முன்னேயும் வருவதையும், கற்பகாம்பாள் எதிரில் வந்தவுடன் அம்பாளுக்கும் அவருக்கும் ஒரே நேரத்தில் ஆரத்தி எடுப்பதையும் மட்டும்தான் பார்த்திருக்கிறேன். ஆனால் இங்கே நந்திகேசுவரருக்கு என்ன இவ்வளவு கொண்டாட்டம்? என்ற கேள்வியுடன் தலபுராணத்தை பார்போம்.

தலபுராணம்

சிவதாண்டவத்தின் போது சிவனின் உக்கிர நடனம் தாங்காமல் சர்வ லோகங்களும் நடுங்குகின்றன. பார்வதி, தேவர்கள், யோகிகள், ஞானிகள் என்று யார் சொல்லியும் சிவன் கேட்பதாயில்லை. எல்லா உயிர்களும் நடுங்குகின்றன. கடைசியில் சிவனின் வாகனமான நதிகேஸ்வரர் போய் சிவனிடம் கோபத்தைக் குறைத்துக்கொள்ளுமாறு வேண்டி சிவனின் பயங்கர தாண்டவத்தால் உலகமே நடுங்குவதாகச் சொல்லுகிறார். அப்போது சிவன், 'நான் எங்கே போய் ஆடுவது?' என்று கேட்க, 'என் தலையிலே ஏறி ஆடுங்கள், நான் தாங்கிக் கொள்கிறேன்' என்று நந்தி சொல்கிறார்.




விடையேறிய பெருமான் விடையின் கொம்புகளுக்கு இடையே நின்று நர்த்தனம் ஆடுகிறார். சிவனின் ருத்ர தாண்டவத்தைத் தன் தலையில் தாங்கிப் பின் சிவனின் கோபத்தைத் தணிக்க உதவியதால் அந்த நேரத்தில், அதாவது அந்தத் 'த்ரயோதசி' தினத்து சாயங்காலத்தில், பிரதோஷம் என்று இன்னமும் எல்லா சிவன் கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது, மாதமிரு முறை. அதனால் அந்த நேரத்தில் நந்திக்கு பூஜை செய்வது பெரிய விஷயம் என்று சொன்னார்கள். ஆந்திராவில் இருந்த கோவிலாக இருந்தாலும் தமிழில் தேவாரப் பாடல்களும் பாடினார்கள். 'எங்கள் ஊரில் தெலுங்கில் தான் பாடவேண்டும்' என்று யாரும் கொடி பிடிக்கவில்லை. உள்ளே சிவனுக்கும் அதே நேரத்தில் அலங்காரம், பூஜைகள் நடந்தாலும் கூட்டம் அலை மோதுவது நந்தியிடத்தில் தான்.பெருமாளுக்குத்தான் நாமம் போடாமல் சந்தனப்பொட்டை வைத்து விட்டார்களோ என்று எனக்கு ஒரு சந்தேகம். விபூதி இடவில்லை, கொடுக்கவுமில்லை. ஆனால் தீர்த்தம் கொடுக்கிறார்கள். குருக்களைக் கேட்டேன். 'இல்லையில்லை. இவர் சிவன் தான். மான், மழு எல்லாமே இருக்கிறது' என்றார் அவர். ஆனந்த நடனம் முடித்து அம்பாள் மடியில் சிரித்துக்கொண்டே படுத்திருப்பதைப் பார்க்கப் பரவசமாக இருக்கிறது.


ஆலய தரிசண நேரம்

காலை 6.00 am to 12.30 pm
மாலை 4.oo pm to 8.00 pm


ஸ்ரீ சர்வமங்கள சமேதா ஸ்ரீ பள்ளிகொண்டேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம்

சுருட்டபள்ளி
நாகலாபுரம் மண்டல்
சித்துர்
ஆந்திரா PIN : 517588

Phone No. 08576-278599

எல்லாம் சிவமயம்


0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More