Thursday, January 12, 2012

காயமும் மருந்தும்



காயமும் மருந்தும்
  நரேந்திரன்

மணி இரவு 8.00. பாத்திரம் கழுவி கொண்டிருந்தபோது தொலைக்காட்சியில் செய்திகள் ஆரம்பித்தன.. "இன்றைய முக்கிய செய்திகள்.. ரஷ்யாவில் கோர சம்பவம்.. பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 300-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பலி.. சென்னையில் பயங்கரம், மர்ம கொலைகள் தொடர்கின்றது. விரிவான செய்திகள் சில நொடிகளில்..விளம்பரங்கள் ஆரமபித்தன. வழக்கமான விளம்பரம். சற்றே கரிய நிறத்தோடு இருக்கும் பெண், அந்த நிறுவனத்தின் "க்ரீம்" தேய்த்தவுடன் கொஞ்சம் நிறம் கூடுதலாக பெற்று தன்னம்பிக்கை அடைந்து தானே மாப்பிள்ளையை தேர்வு செய்வதாக விளம்பரம்.. என்ன பைத்தியக்காரத்தனம்....

மனதிற்குள் லேசாக சலிப்பு.. பின்னே 38 வயது வரைக்கும் எனக்கு ஒரு ராஜ குமாரன் வருவான் என்று காத்திருந்து காத்திருந்து உணர்வுகள் அனைத்தும் மரத்து போன சோகம்.. இத்தனைக்கும் எனக்கு நல்ல படிப்பு, அறிவு , கை நிறைய சம்பாதிக்கும் வேலை எல்லாம் இருந்தும் ஒரு உபயோகம் இல்லை. எனக்கு கல்யாணம் நடக்காததற்கு முக்கிய காரணம் எனது நிறம். என் குடும்பததில் நான் மட்டும் தான் கரிய நிறம் கொண்டவள். என் தங்கை அக்கா மற்றும் உறவினர்கள் அனைவரும் நல்ல சிவப்பு .. நான் மட்டும் தான் தப்பி பிறந்தேனாம்.. மருத்துவமனையில் இடம் மாறி வந்து விட்டேன்.. என்று எல்லோரும் கேலி செய்வார்கள்.. என் பாட்டி தான் என்னை அந்த கிண்டல்கள், கேலிகளிடம் இருந்து காப்பாற்றி வளர்த்தாள். என் பாட்டியும் என்னை போலத் தான்.... என்னை பெண் பார்த்து சென்ற அத்தனை பேர்களிடமும் விழுந்து விழுந்து உபசரித்தவளும் அவள்தான்..

தொலைக்காட்சியில் திடீர் என்று சத்தம் அதிகமாக கெட்டது. குண்டு வெடிக்கும் சத்தத்துடன், ரத்த கோலத்துடன் ஒரு குழந்தை ஒடி வரும் காட்சி...".ரஷியாவில் நடந்த தீவிரவாதத்திற்கு உலக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.............. சென்னையில் பயங்கரம்.. மர்ம கொலைகள் தொடர்கின்றன.. நேற்றிரவு பிரபல இயக்குனர் கழுத்தறுபட்டு கொல்ல பட்டார். இவர் சென்ற ஆண்டு சிறந்த விளம்பர பட இயக்குனர் விருது வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.. சென்ற வாரம் ஒரு பிரபல நடிகரும், தனியார் நிறுவன முதல்வரும் இதே முறையில் கொல்ல பட்டது திரைத்துறையினரையும் சென்னை மக்களையும் பீதி அடைய வைத்துள்ளது.. காவல் துறையினர் வெகு விரைவில் குற்றவாளியை பிடித்து விடுவோம் என்று நம்பிக்கை
தெரிவித்துள்ளனர்..."

"எங்கே பார்த்தாலும் கொலை கொள்ளை என்ன உலகம்டா இது.. "

இந்த கறை வேற எவ்வளவு அழுத்தி தேய்த்தாலும் போக மாட்டேங்குது.. என் நிறத்தை போல.. எத்தனை "க்ரீம்", "பவுடர்" போட்டாலும் அதே கருப்பு நிறம் தான். என் பாட்டி இருந்தவரை நிறைய மஞ்சள் மற்றும் இயற்கை மூலிகை வைத்து என் சருமத்துக்கு மெருகூட்ட முயற்சி செய்வாள்.. ம்ம்... அவள் போய் சேர்ந்து இன்றோடு 2 மாதம் ஆக போகிறது..

நான் என் பாட்டியை பிரிந்து இவ்வளவு நாள் இருந்தது கிடையாது.. இதற்காகவே வேலை விஷயமாக வெளிநாடு போக வந்த வாய்ப்பையெல்லாம் மறுத்திருக்கிறேன்.. அப்படியெ சென்றாலும் ஒரு வாரம் இரண்டு வாரம் தான். ஆனால் இரண்டு வாரத்திலேயெ அந்த சமூகத்தை பற்றி கற்க நிறைய விஷயம் இருந்தது... மேற்கத்தைய சமூகத்திற்கும் நமக்கும் தான் எவ்வளவு வித்தியாசம்.. எத்தனை வகை வகையான மனிதர்கள், வகை வகையான நிறங்கள்... நிறத்தின் பெயரால் நாற்பதாண்டுகளுக்கு முன் வரை உரிமைகள் மறுக்க பட்டிருந்தோர் இன்று கலை, மற்றும் விளையாட்டு உலகத்தின் முன்னோடிகள்.. ஆச்சர்யம் என்ன வென்றால், நிறைய பெண்கள் கலைத்துறையில் "ஹீரோயின்"களாகவே நடிக்கின்றனர்... அதை பாட்டியிடம் சொன்ன போது அவள் நம்பவே இல்லை.. "அது எப்படி, நம்மூர்லெயே தொலைக்காட்சி, திரைப்படத்திலெ கருப்பு நிற "ஹீரோயின்"-னை பாக்க முடியலே.. வெள்ளைக்காரன் போயா பாக்க போரான்" என்று சொன்னாள்.. நான் அந்த நடிகைகளின் படத்தை அவளுக்கு காண்பித்த போது கூட நம்பவில்லை....

மறுபடியும் தொலைக்காட்சியில் சத்தம்.. சத்தத்தை எப்படி குறைப்பது என்று வேறு தெரியவில்லை.. பார்ததால் புதிதாய் வந்த படததில் இருந்து ஒரு பாட்டு..

சே..என்ன தான் தேய்ச்சாலும் இந்த பாத்திரத்தில் இருக்கும் கறை வேற சீக்கிரம் போக மாட்டேங்குது..

சென்ற வாரம் கொலை செய்ய பட்ட அந்த நடிகர் படத்தில் பாட்டு பாடி ஆடி கொண்டிருந்தார்.. அட்டைக் கரி போன்ற நிறத்தில் இருக்கும் அந்த நடிகருக்கு இரண்டு வெள்ளைக்காரிகள் போல இருக்கும் "ஹீரோயின்"கள்.. சிரிப்பு தான் வந்தது.. பாட்டி சொன்னது சரிதான்.. நம்ம ஊர் மக்கள் முக்கியமாக கலைத்துறையில் கருப்பு நிற பெண்களை சமமாக மதிப்பது இல்லை தான்.. ஆனால் அதற்கு காரணம் தான் பிடி பட மாட்டேங்குது.. ஒரு வேலை வெள்ளைக்காரன் ஆட்சியால் வந்த மோகமோ.. அப்படி இருந்தாலும் அது போய் தான் 50 ஆண்டு ஆச்சே.. இன்னும் ஏன்.. இந்த வெள்ளை மோகம்.. ஏதாவது அறிவியல் காரணம் இருந்தாலும் பரவாயில்லை.. ஆனால் அதிலும் வெள்ளைத்தோலுக்கு தான் "தோல் புற்றுநோய்" வர சாத்தியம் அதிகம் என்று அறிவியல் கூறுகின்றது.. ம்ம்ம்..

வாசலில் ஏதோ ஒரு கார் வந்து நிற்கும் சத்தம். சீக்கிரம் கழுவி முடிக்க வேண்டும்.. இன்னும் ஒரு  கறை இருக்கிறது.. எனக்கு என்னவோ எந்த விஷயத்தை செய்தாலும் அதை சரியாக எந்த குறையும் இல்லாமல் செய்து முடிக்க வேண்டும்.. எல்லாம் பாட்டி கற்று கொடுத்தது.... யாரும் வந்து அழைப்பு மணியை அடிக்கவில்லை.. பக்கத்து வீட்டிற்கு வந்த கார் போல இருக்கிறது.. தொலைக்காட்சியைப் பார்த்தால் எதுவோ விளம்பரம் ஒடி கொண்டிருந்தது.. இளம்பெண்கள்.. வித விதமான புடவைகளில் தோன்றினார்கள்.. எதுவோ துணிக்கடை விளம்பரம்.. வழக்கம் போலத்தான் இந்த விளம்பரமும்...இப்பொழுதெல்லாம் இந்த விளம்பரங்களை பார்த்தால் வெறுப்பாய் இருக்கிறது..

பாட்டி என்னை விட்டு பிரிந்த பின் எனக்கு வாழ்க்கையில் பிடிப்பே இல்லை.. என்னை என்னிடம் இருந்து காப்பாற்ற யாருமே இல்லை.. என் கோபத்தை எல்லாம் கட்டுப்படுத்தி வந்த பாட்டியும் இல்லை...அவளிடம் நான் எவ்வளவு கோப பட்டாலும் அமைதியாக கேட்டு கொண்டிருப்பாள்.. பாதி புரிய வில்லை என்றாலும் கூட... அவளுக்கு நான் பேசும் "மீடியா", "soft power" எல்லாம் புரியுமா என்பதே சந்தேகம் தான்..

பாட்டி.. ஏன் பாட்டி என்னை விட்டுட்டு போனே.....

"அசடு.. ஏண்டி அழறே..நீ என்ன செய்யணும்னு நினைக்கிறியோ அதை தைரியமா செய்.. நான் இருக்கேன்ல.."

திடுக்கிட்டு திரும்பினேன்.. என்னது பாட்டியா பேசறது.. இல்லை தொலைக்காட்சியில் வரும் தொடரில் ஒரு வசனம்..

எனக்கு பாட்டியே பேசியது போல ஒரு உணர்வு.. திடீர் என்று பாலைவனததில் நீர் வெள்ளம் புகுந்தது போல் ஒரு மகிழ்ச்சி.. அதற்கேற்றாற்போல இவ்வளவு நேரம் கழுவி கொண்டு இருந்த என்னுடைய "சமூக சீர்த்திருத்த" நடவடிக்கைக்கு பாத்திரமான 'கத்தி"யிலும் ரத்தக்கறை சுததமாக போய் விட்டிருந்தது.. அதை எடுத்து கொண்டு விளம்பரங்களுக்கு வசனம் எழுதும் வசன கர்த்தா வீட்டில் இருந்து கிளம்பினேன்…





முற்றும்
 

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More